Asianet News TamilAsianet News Tamil

இந்து - முஸ்லிம் வெறுப்பு பேச்சு.. வீட்டிற்கே சென்று அலேக்கா தூக்கிய போலீஸ்.. இந்து மகா சபா தலைவர் அதிரடி கைது

அமைதியை சீர்குலைத்து, மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

All India Hindu Maha Sabha state president arrested for inciting religious riots
Author
Tamilnádu, First Published Apr 24, 2022, 9:56 AM IST

அமைதியை சீர்குலைத்து, மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கடந்த 17 ஆம் தேதி கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்ரமணியம் கோயில் நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில் அங்குள்ள உள்ளரங்கத்தில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர்,  கேரளாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் படுகொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி,வன்முறை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

கேரளாவில் ஒருவரை வெட்டினால் இன்னொருத்தரை வெட்டுவார்கள். தமிழ்நாட்டில் அப்படி இருக்க முடியாது. நாட்டில் இந்துக்களை பாதுகாப்பது நமது கடமை என்றும் மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.இது தொடர்பாக  புதுக்கடை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரத்தினதாஸ் அளித்த புகாரின்பேரில் பாலசுப்பிரமணியம் மீது இரண்டு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை இன்று அதிகாலை ஈத்தாமொழியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியத்தை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் காவல்துறையினரின் கைது நடவடிக்கைகளை கண்டித்து, இந்து அமைப்பு தொண்டர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.தொடர்ந்து போலீசார் அவரை குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios