தமிழகத்தில்  கடந்த 4 ஆம் தேதி முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கொளுத்தி வருகிறது. பல இடங்களில் வெயில் நாள்தோறும் சதமடித்து வருகிறது. குறிப்பாக வேலூர், திருச்சி,  மதுரை போன்ற இடங்களில் வெயில் 106 டிகிரி வரை நிலவி வருகிறது.

இந்த அக்னி நட்சத்திரம் நாளை மறுநாள் வரை நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், தென் மேற்கு பருவமழை தொடங்கும் வரை வெயில் நீடிக்கும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஜுன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிகத்தில் பல பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக பல இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. தேனி, கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே  குருபரதப்பள்ளி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆலங்கட்டி மழை பெய்தபோது சிறுவர்கள் ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.