பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் சுமுக உறவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பதிவியேற்றுள்ள கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

கடந்த ஏப்ரல் 12ம் தேதி ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி எதிர்க்கட்சிகளின் பல்வேறு புகார்களால், அப்போதைய சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக கரன் சின்ஹா நியமிக்கப்பட்டார்.

இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் கமிஷனர் கரன் சின்ஹா, சீருடை தேர்வாணையத்துக்கு திடீரென மாற்றப்பட்டார். இதையடுத்து, புதிய கமிஷனராக ஏ.கே.ஸ்விஸ்வாதன் நியமனம் செய்யப்பட்டார்.

இதையொட்டி, இன்று அவர், புதிய கமிஷனர் பதவியை ஏற்று கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சட்டம் ஒழுங்கு குறித்த எந்த பிரச்சனையாக இருந்தாலும், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே சுமுக உறவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் சேவையே பிரதமானது.

தினமும் பொதுமக்களிடம் இருந்து அனைத்து கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிகை மற்றும் ஊடகங்களை மாதத்தில் ஒரு நாள் சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.