Airport service from Kamalapuram airport - V.Panniriselvam MP
சேலம்
உதான் திட்டத்தின் கீழ் சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என்றும், இரு விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்றும் வி.பன்னீர்செல்வம் எம்.பி. தெரிவித்தார்.
சேலத்தில் வி.பன்னீர்செல்வம் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.
அதில், “நாட்டில் சிறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்து பயணிகள் விமானங்களை இயக்க மத்திய அரசு உதான் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத் திட்டத்தின் கீழ் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கி, இரு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
ஒரு விமானம் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னை, பெங்களூரு வழியாக சேலம் வந்தடையும். பின்னர் மீண்டும் புதுச்சேரிக்கே செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
மற்றொரு விமானம் சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட உள்ளது.
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் பயணிகள் தங்கும் அறை, சோதனை அறை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான அறைகள் பராமரிப்பு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
அடுத்த மாதத்தில் விமானங்கள் இயக்கப்படும்.
சேலம் விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கத்திற்குத் தேவையான இடத்தைக் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலத்தில் இருந்து விமானம் இயக்கப்படும் பட்சத்தில் தொழில் வளர்ச்சி பெருகும்” என்று அவர் தெரிவித்தார்.
