திருவள்ளூர் அருகே கந்து வட்டி கேட்டு, அதிமுக பிரமுகர் பெண்ணைக் கடத்தினார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் பெண்ணை மீட்டனர்.

திருவள்ளூரை அடுத்த தேவி மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் மேதிராஜ். இவரது மனைவி செல்வி (50), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொழுவூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பொம்மி என்பவரிடம், மாதம் ரூ. 10 வட்டி வீதம், ரூ. 50 ஆயிரத்தை கடனாகப்
பெற்றுள்ளார்.

பின்னர், அவர் வட்டியுடன் சேர்த்து ரூ. 1.40 இலட்சத்தை பொம்மியிடம் சிறுக, சிறுக கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், அசல் தொகையான ரூ. 50 ஆயிரத்தை திரும்பத் தருமாறு செல்வியிடம் பொம்மி கேட்டுள்ளார். அப்போது, தான் வட்டியுடன் சேர்த்து முழுத் தொகையையும் கொடுத்துவிட்டதாக செல்வி கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பொம்மி, வியாழக்கிழமை தனது கார் ஓட்டுநர் சுரேஷின் உதவியுடன் செல்வியை கடத்திச் சென்றதாகத் தெரிகிறது.

இதுகுறித்து செல்வி, அவரது மகன் மணிகண்டனுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்தார். பின்னர், மணிகண்டன் இதுகுறித்து திருவள்ளூர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, காவல்துறையினர் பொம்மியின் வீட்டுக்குச் சென்று செல்வியை மீட்டனர். காவல்துறையினரைக் கண்டதும், பொம்மியும், சுரேஷும் தப்பியோடினர்.

இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பொம்மியையும், சுரேஷையும் தேடி வருகின்றனர்.