யார் அந்த SIR.! சட்டசபையில் சம்பவம் செய்த அதிமுக.! சபாநாயகர் எடுத்த அதிரடி முடிவு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 'சார்' யார் என அதிமுகவினர் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினர். மாணவிக்கு நீதி வேண்டும் எனக் கோஷமிட்ட அதிமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.
அண்ணா பல்கலை - பாலியல் வன்கொடுமை
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் சார் ஒருவரிடம் தொலைபேசியில் பேசியதாக புகார் அளித்திருந்தார். இந்த எப்ஐஆர் பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த எப்ஐஆரில் மாணவி கூறியிருந்ததன் அடிப்படையில் யார் அந்த சார் ? அவரை ஏன் காவல்துறை கைது செய்ய மறுக்கிறது என அதிமுக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் யார் அந்த சார்? எனும் பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.
அதிமுக போராட்டம்
இன்று சட்ட சபை கூடியதும் ஆளுநர் ரவி, சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தயாரித்த உரையை படிக்காமல் புறக்கணித்து வெளியேறினார். இதனையடுத்து அண்ணா பல்கலைகழக மாணவிக்கு உரிய நீதி வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவினர் கோஷம் எழுப்பி, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.
அதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில், அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். சட்டப்பேரவை நுழைவு வாயிலில் அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.