தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மாணவர்கள் 'அப்பா' என அழைப்பது அரசியல் பேசுபொருளாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் விமர்சிக்க, ஆளுங்கட்சி பதிலடி கொடுக்கிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை 'அண்ணன்' என அழைக்கும் போஸ்டர்கள் நெல்லையில் அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ளன.

முதல்வரை அப்பா என அழைக்கும் மாணவர்கள்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்நில் நடைபெற்று வரும் திட்டங்கள், அதன் நிலை தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் அந்த மாவட்டங்களில் உள்ள கல்வி திட்டங்கள் தொடர்பாக கல்லூரிக்கு முதலமைச்சர் செல்லும் போது அங்குள்ள மாணவ, மாணவிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை "அப்பா" என்று அழைத்து வருகின்றனர். இது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக அமைந்துள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் உங்களில் ஒருவன் என்ற கானொளி நிகழ்வில் அப்பா என்ற வார்த்தை தொடர்பாக பேசினார்.அப்பா என இளைய தலைமுறையினர் அழைப்பதை கேட்கும் போது ஆனந்தமாக உள்ளதாக கூறினார்.

முதலமைச்சர் சந்தோஷம்

காலம் மாறினாலும் பதவி மாறினாலும் அப்பா என்ற உறவு முறை மாறாது என தெரிவித்திருந்தார்.இந்த கருத்து அதிமுக பாஜக எதிர்கட்சியினர் மத்தியில் பெரும் பேச்சை உருவாக்கி பல்வேறு சர்ச்சைகளும் ஏற்படுத்தியது. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதன் படி, அப்பா என்று ஒருவரை அழைத்தால் அதற்கு அர்த்தம் வேறு அனைவரையும் அப்பா என்று அழைக்க முடியாது என கூறியவர், ஸ்டாலின் தன்னை அப்பாவாக சொல்லிக் கொள்ளக் கூடாது மக்கள் தானாக சொல்ல வேண்டும் என கடுமையாக விமர்சித்திருந்தார். 

விமர்சித்த சி.வி.சண்முகம்

அதற்கு தமிழக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள பதிவில், அம்மா... அம்மா.. என அமையார் ஜெயலலிதா இருக்கும் போது உருகிய சண்முகத்தின் நாக்கு, ஜெயலலிதா இறந்த பிறகு சின்னம்மா இல்ல...எங்க அம்மா என சசிகலாவையே அம்மா ஸ்தானத்தில் வைத்தார். அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா? என கூறியிருந்தார். 

அண்ணன் எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை அப்பா என கூறி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் என்ற அடைமொழியுடன் அழைத்து போஸ்டர்கள் ஒட்டி நெல்லை அதிமுகவினர் டிரண்டாக்கி வருகின்றனர்.இந்த போஸ்டர்கள் நெல்லை மாநகர பகுதி முழுதும் ஒட்டபட்டுள்ளது.அதில் தமிழக மக்கள் அனைத்து குடும்பத்துன் மூத்த அண்ணன் எடப்பாடியார் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.