திருவாரூர் 

நாடாளுமன்றத்தில் பா.ஜனதா அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டுவருவதை தடுப்பதற்காகவே காவிரி மேலாண்மை வாரியத்திற்கு போராடுவதுபோல அதிமுக அரசு நாடகம் ஆடுகிறது என்று முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அ.தி.மு.க. நாடகம் ஆடுகிறது என்று டி.ஆர்.பாலு கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

இந்த ஆர்பாட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், "காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அ.தி.மு.க. நாடகம் ஆடுகிறது. நாடாளுமன்றத்தில் பா.ஜனதா அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டுவருவதை தடுப்பதற்காகவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்காக போராடியது போன்று செயல்பட்டது.

‘ஸ்கீம்’ என்று குறிப்பிடுவது எந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக வழக்கு போடப்பட்தோ அந்த பிரச்சனையைத்தான் குறிக்கும். அதைவிடுத்து தற்போது புது விளக்கம் தரப்படுவது திசை திருப்பும் செயல். 

காவிரி பிரச்சனைக்கு உறுதியான இறுதியான தீர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுதால் மட்டுமே ஏற்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தி.மு.க. போராடும்" என்று அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ், நகர செயலாளர் கணேசன் உள்ளிட்ட திரளான தி.மு.க வினர் பங்கேற்றனர்.