Asianet News TamilAsianet News Tamil

நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் கர்நாடகா..! வேளாண் தொழிலே முடங்கும் அபாயம்- ஓபிஎஸ்

நதிநீர் இணைப்புத் திட்டத்தின் விரிவான அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் கர்நாடக சட்டமன்றம்  மற்றும் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கர்நாடக அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

AIADMK co ordinator ops condemns Karnataka government for working against river connection project
Author
Tamilnadu, First Published Jun 1, 2022, 11:42 AM IST

திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் இல்லை

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவோம்” என்று கர்நாடக அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கூறுவது காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணானது என்பதால், கர்நாடக அரசின் தன்னிச்சையான முடிவைக் கண்டித்து இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, இந்தத் திட்டத்திற்கு எந்தவிதமான தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. மேகதாது அணை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் கர்நாடக சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மட்டுமல்லாமல், காவேரி படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து ஒரு முடிவு ஏற்படும் வரையில், தமிழ்நாட்டின் கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - காவேரி - வைகை - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் விரிவான அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் கர்நாடக சட்டமன்றப் மற்றும் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கர்நாடக அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. கர்நாடக அரசின் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

AIADMK co ordinator ops condemns Karnataka government for working against river connection project

நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான நடவடிக்கை

காவேரி படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து காவேரி நடுவர் மன்றம் 2007 ஆண்டே தனது இறுதித் தீர்ப்பினை வழங்கிவிட்டது. இதன்படி, 192 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகா திறந்து விட வேண்டும். இந்தத் தீர்ப்பின்படி கேரள மாநிலத்திற்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீர்ப் பங்கீட்டின் அளவை 192 டி.எம்.சி. அடியிலிருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைத்தது. அதாவது 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டது. அதே சமயத்தில் கர்நாடகாவின் நீர்பங்கீடு அளவு 270 டி.எம்.சி.யிலிருந்து 284.75 டி.எம்.சி.யாக உயர்த்தப்பட்டது. கேரளா மற்றும் புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இதன்மூலம் காவேரி படுகை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் உரிய நீர்ப் பங்கீடு உச்ச நீதிமன்றத்தால் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. இந்தச் சூழ்நிலையில், மறுபடியும் காவேரி நதிப் படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து ஒரு முடிவு ஏற்படும் வரையில், தமிழ்நாட்டின் கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - காவேரி - வைகை - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்ற கர்நாடக சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவைத் தீர்மானத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான செயல் ஆகும். இது நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு எதிரான செயல்.

AIADMK co ordinator ops condemns Karnataka government for working against river connection project

முதலமைச்சர் தலையிட வேண்டும்

தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே உரிய நீருக்குப் பதிலாக உபரி நீர் தான் கிடைத்து வருகிறது. வரும் உபரி நீரையும் தடுக்கும் நோக்கில் 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று கர்நாடாக சொல்வதும், நதிநீர் இணைப்புத் திட்டத்தை முடக்கும் நோக்கத்துடன் செயல்படுவதும் முற்றிலும் நியாயமற்ற செயல். இந்த நியாயமற்ற செயலை அனுமதித்தால், கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு தற்போது வந்து கொண்டிருக்கும் உபரி நீரும் கிடைக்காமல் போகக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதன் விளைவாக காவேரி நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படுவதோடு, வேளாண் தொழிலே முடங்கக்கூடிய அபாயம் ஏற்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, காவேரி படுகை மாநிலங்களின் உரிய பங்கு என்பது ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - காவேரி - வைகை - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி பெறவும், மேகதாது அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்தவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

சசிகலா பாஜகவில் இணைந்தால் கட்சியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்- பாஜக மூத்த தலைவர் கருத்தால் பரபரப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios