சிவகங்கை

சிவகங்கையில் “நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும்” என்று வள்ளி-தெய்வானை சமேத முருகன் கோயிலில் விளக்குப் பூசை நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் வெள்ளிக்குறிச்சியில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத முருகன் கோயிலில் “மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும்” என்று 501 திருவிளக்குப் பூசை நடைப்பெற்றது.

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு விளக்கு பூசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முருகனுக்கு பலவகை ஆராதனைகள் செய்யப்பட்டன. அதன்பின் முருகன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் வழங்கினார். 

கோயில் முன் மண்டபத்தில் நடந்த விளக்குப் பூசையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி பூசைகள் செய்தனர். பூசை முடிந்ததும் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள், தீபாரதனைகள் நடைபெற்றது.

விளக்குப் பூசையில் பங்கேற்ற பெண்களுக்கு சேலை, மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யக் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

பூசைக்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுத் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் வெள்ளிக்குறிச்சி கிராம மக்கள் செய்திருந்தனர்.