கோடை வெயிலின் உச்ச கட்டமான, அக்கினி நட்சத்திரம் என்ற, கத்திரி வெயில், நாளை மறுநாள் தொடங்குகிறது.. மே,28 வரை, வெயில் கடுமையாக கொளுத்தும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயிலின் போது  பகல் நேரத்தில், வெளியில் தலை காட்டாமல் இருப்பது நல்லது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே  கோடையின் தாக்கம் துவங்கி விட்டது. காற்றின் ஈரப்பதமும் குறைந்து விட்டதால், வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல், மக்கள் திணறி வருகின்றனர். 

கத்திரி வெயில் தொடங்கும் முன்னரே  , தமிழகத்தில் பல மாவட்டங்களிலும், 40 டிகிரி செல்சியசுக்கு மேல், வெப்பம் பதிவானது.'பகல் நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம்' என, அரசே எச்சரிக்கும் விடும் அளவுக்கு, வெப்பத் தாக்கம் அதிகமாக இருந் தது. கத்திரி  வெயில் வந்தால்  நிலைமை எப்படி இருக்குமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், கத்திரி வெயில், நாளை மறுநாள் துவங்கி, 28ம் தேதி வரை நீடிக்க உள்ளது. இதனால், வெயில் வழக்கத்தை விட, அதிகமாக இருக்கும் என்பதால் பகல் நேரங்களில், மக்கள், தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என, டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.