போரூர் பாலத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டது... 7 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த பாலத்தை திறந்து வைத்தார் எடப்பாடி
கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு 7 ஆண்டுகளாக இழுத்தடித்து கட்டப்பட்ட சென்னை போரூர் மேம்பாலம், இன்று திறக்கப்படுகிறது.
பரங்கிமலை - பூந்தமல்லி சாலையும், ஆற்காடு சாலையும் சந்திக்கும் இடமாக உள்ள , போரூர் ரவுண்டானா , பூந்தமல்லி சாலை, பெங்களூரு நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி., சாலை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
மேலும் குன்றத்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஆற்காடு சாலையை பயன்படுத்தி தான், சென்னை நகருக்குள் வர வேண்டியுள்ளது.
இதனால், போரூர் சந்திப்பில், வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த நெருக்கடியை சமாளிக்கும் விதமாக இந்த நான்கு சாலைகளும் சந்திக்கும் இடத்தில், மேம்பாலம் அமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில், 480 மீட்டர் நீளம், 37.2 மீட்டர் அகலம், இருபுறமும் தலா, 7.5 மீட்டரில் சர்வீஸ் சாலையுடன், மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த 2010 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் ஆட்சி மாறியவுடன் வழக்கம்போல் அதிமுக அரசு பாலம் கட்டும் பணிகளை கிடப்பில் போட்டது.
கொஞ்சம், கொஞ்சமாக ஆமை வேகத்தில் நடைபெற்ற இந்த பணிகள் 7 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் முடிவடைந்துள்ளது. கடந்த வாரம் மழை காரணமாக ஏற்பட்ட திடீர் போக்குவரத்து நெரிசலை அடுத்து பொது மக்கள் தாங்களாகவே பாலத்தை பயன்படுத்த தொடங்கினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு இந்னு பாலத்தை திறந்து வைக்க முன்வந்துள்ளது. இதையடுத்து போரூர் பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.