திண்டுக்கல்

கடந்த 15 நாட்களுக்கு பிறகு கொடைக்கானலில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்கள் சீசன் காலம் என்பதால் இங்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். 

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவர குறுகிய கால மலர்களான கிங் ஆஸ்டர், பேன்சி, டைந்தேஷ், ஆரணத்திக் கோலம், மேரி கோல்ட்  உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட வகை வகையான பூக்கள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும். இந்த வகை மலர்கள் மூன்று மாதத்திற்குள் பூத்து உதிர்ந்துவிடும் என்பதுதான் இவற்றியன் தனிச்சிறப்பு.

இந்த நிலையில், ஜூலை - செப்டம்பர் வரை இரண்டாம் கட்ட சீசன் தொடங்கும் என்பதால் பிரையண்ட் பூங்காவில் குறுகிய கால மலர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, மீண்டும் பாத்திகளை தயார் செய்வர். 

அதன்படி, டெய்சி, புளோரோனியம், கொரியாப்ஸ், டெலிபீனியம்  உள்ளிட்ட மலர்ச் செடி நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்தச் செடிகளில்  பூக்கள், ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை பூக்கும்.  தற்போது மலர்ச் செடிகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் பல்வேறு இடங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஜூலை மாதத்தில் வழக்கமாக மழை பெய்யும். ஆனால், தற்போது மழை இல்லாமல் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

குளிர்ச்சியான சூழ்நிலையால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாக அதிகரித்துள்ளது.  வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்து  வருகின்றனர். 

கடந்த 15 நாட்களுக்கு பிறகு கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் இங்கு பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளவர்களும் சந்தோஷத்தில் உள்ளனர்.