advocates are not lowers for being humble - High Court Chief Justice
சேலம்
"நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் பணிவாக இருப்பதால் எந்த விதத்திலும் அவர்கள் கீழானவர்கள் அல்ல" என்று சேலத்தில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.
சேலம் வழக்குரைஞர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞர் சங்க முன்னாள் தலைவரும், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு இணைச் செயலாளருமானவர் வழக்குரைஞர் வி.ஆர்.சந்திரசேகரன். இவர், ஐம்பது ஆண்டு கால வழக்குரைஞர் தொழில் நிறைவு பெற்று பணியாற்றி வருகிறார்.
அவரை கௌரவிக்கும் வகையில் சேலம் வழக்குரைஞர் சங்கம் சார்பில் வழக்குரைஞர் வி.ஆர்.சந்திரசேகரனின் பொன்விழா நிகழ்ச்சி சேலம் மாவட்ட்டம், அழகாபுரத்தில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு வழக்குரைஞர் சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். செயலாளர் கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி வரவேற்றார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்று,வழக்குரைஞர் வி.ஆர்.சந்திரசேகரனின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
பின்னர், விழாவில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியது: "உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று நான் தமிழகத்திற்கு முதன் முதலாக வந்தபோது இங்குள்ள இலக்கியம், கலை, பாரம்பரியம், கட்டிட கலை உள்ளிட்டவை என்னை மிகவும் கவர்ந்தது.
சேலம் வழக்குரைஞர் சங்கம் தொடங்கி 220 ஆண்டுகள் ஆகிறது. பாரம்பரியமிக்க இந்த வக்கீல் சங்கம் நீதித்துறை வளர்ச்சியில் தனது பங்களிப்பை கொடுத்துள்ளது.
கிரிமினல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், சேலம் வழக்குரைஞர் சங்கம் மட்டும் இந்த பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தை நாடியது. இது எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியான அணுகுமுறையாகும்.
45 ஜூனியர் வழக்குரைஞர்களை உருவாக்கிய வழக்குரைஞர் வி.ஆர்.சந்திரசேகரன். இவர் மேலும் பல ஜூனியர்களை உருவாக்கிட வேண்டும்.
வழக்குரைஞர் வாதங்களை ஆணித்தரமாக யாரையும் புன்படுத்தாத வகையில் எடுத்து வைக்க வேண்டும். எங்கெல்லாம் சரியான வாதம் எடுத்து வைக்கப்படுகிறதோ, அங்கு சரியான நீதி வழங்கப்படும்.
நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பணிவாக இருப்பதால் எந்த விதத்திலும் அவர்கள் கீழானவர்கள் அல்ல. வழக்குரைஞர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்" என்று இந்திரா பானர்ஜி பேசினார்.
இந்த விழாவில் நீதிபதிகள் தங்கவேல், அக்பர் அலி, கலையரசன், ராஜமாணிக்கம், மோகன்ராஜ், தீனதயாளன், மூத்த வக்கீல் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவின் இறுதியில் வழக்குரைஞர் சங்க துணைத்தலைவர் ரமணி நன்றி தெரிவித்தார்.
