வேலூர்

தமிழகத்தை நம்பி உள்ள புதுச்சேரிக்கு வருபவர்கள் அரசைப் பற்றி கருத்துகணிப்பு எடுத்து ஆலோசனைக் கூறுங்கள். குறை இருந்தால் அதனை நிவர்த்தி செய்கிறோம்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள காமராசர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில், திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் காமராசரின் 115–ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நான்காயிரம் மாணவ, மாணவிகளுக்கு சீருடை, நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவர் பி.கணேஷ்மல் தலைமை வகித்தார். செயலாளர் கே.சி.எழிலரசன் வரவேற்றார். கல்வியாளர் ஜி.குமரேசன், ஆடிட்டர் எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சி.ஞானசேகரன், டி.கே.ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி பங்கேற்று, நான்காயிரம் மாணவ, மாணவிகளுக்கு சீருடை, நோட்டுப் புத்தகம் வழங்கினார்.

அப்போது அவர் பேசியது:

“முதல்வர் பதவி என்பது முள்ளின் மீது நடப்பது போன்றது. மத்திய அரசை அணுகி திட்டங்களைப் பெற வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். காமராசரின் காலம் பொற்காலம். அணை, மின் உற்பத்தி, சாலை, பாலம், பள்ளி, மருத்துவமனை ஆகியவைகளுக்கு அடித்தளம் போட்டவர் காமராசர். அவர் காலத்தில் தொழிற்சாலைகளைக் கொண்டு வருவதில் தமிழகம் 2–வது இடத்தில் இருந்தது.

கூடங்குளத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் ஆறு அணு உலைகள் அமைக்கப்பட்டு அங்கு இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் மின்சார பிரச்சனை இல்லாமல் இருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் இந்தியாவில் சிறிய மாநிலம். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். மாற்றுக் கட்சி மத்தியில் இருந்தாலும், திட்டங்களை பெற்று வருகிறோம். தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு மூலதனம், மின்சாரம் உள்ளிட்டவைகளுக்கு மானியம் வழங்குகிறோம்.

புதுச்சேரி தமிழகத்தை நம்பி உள்ள மாநிலமாக உள்ளது. அங்கு வருபவர்கள் அரசைப் பற்றி கருத்துகணிப்பு எடுத்து ஆலோசனைக் கூறுங்கள். குறை இருந்தால் அதனை நிவர்த்தி செய்கிறோம்” என்று அவர் பேசினார்.

மேலும், விழாவை முன்னிட்டு, காமராசரின் வாழ்க்கை வரலாறுப் பற்றி மாணவர் அரங்கம், இன்னிசை பாட்டரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

இந்த விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவின் இறுதியில் ஏலகிரி வி.செல்வம் நன்றித் தெரிவித்தார்.

பின்னர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“இந்தி மொழி கற்றுக் கொள்வது அவரவர் விருப்பம். ஆனால் திணிக்கக் கூடாது. இந்தி மொழி திணிப்பை எதிர்க்கிறோம்.

கிரண்பேடியுடன் கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது.

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கிறோம்”.