சியாமளாபுரத்தில் பெண்களை வெறித்தனமாக தாக்கிய ஏடிஎஸ்பி மீது காவல்துறை அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய உத்தரவு வெளியாகலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

திருப்பூர் சியாமளாபுரத்தில் டாஸ்மார்க் மதுபானக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சூலூர் எம்எல்ஏ கனகராஜூம் பொதுமக்களின் சாலைமறியலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதனிடையே எம்எல்ஏ அங்கிருந்து வெளியே சென்ற உடன் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது ஈஸ்வரி என்ற பெண்ணை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கன்னத்தில் அறைந்ததுடன் தடியடியும் நடத்தினார்.

காவல்துறை அதிகாரியின் செயலுக்கு அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று நீதிபதிகள் எடிஎஸ்பிக்கு கைது செய்ய உத்தரவிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.