மத்திய அரசுடன் மாநில அரசுக்கு இணக்கமான சூழல் வேண்டும் என்றால் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ கனகராஜ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம், சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ். இவர் கடந்த மாதம் கல்குவாரியில் உயிரிழந்தவர்களின் மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் சசிகலா அணியில் இருந்து ஒ.பி.எஸ் அணிக்கு மாறிவிடுவேன் என்றும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் மதுக்கடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடைகளை திறந்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என அறிவித்தார்.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இருப்பதால் மத்திய அரசை அமைச்சர்கள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என கேட்டுகொண்டார்.

இந்நிலையில், அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

கொடநாடு பங்களாவில் போதிய காவலர்கள் இல்லாததால் கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் வாழ்ந்த பங்களாவில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.

கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒரு சிலர் இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சி பணிகள் நிறைவேற்ற முடியும். அந்த வகையில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துகொண்டால் நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.