அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் இரட்டை இலை சின்னம் பெருவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் இரண்டாக பிளவு பட்டுள்ள அதிமுக அணிகள் ஒன்றாக இணைய 60 நாட்கள் கெடு விதித்தார். டிடிவி தினகரன் விடுத்த கெடு இன்றுடன் முடிவடைந்தது.

இன்று மாலை திடீரென செய்தியாளர்களை சந்தித்த அவர் அமைச்சர்களின் கோரிக்கைகளை ஏற்றுத்தான் நான் கட்சி விஷயத்தில் தலையிடாமல் கடந்த 60 நாட்களாக இருந்ததாக கூறினார்.

மேலும் இரு அணிகள் இணைக்க அவர்கள் என்னதான் முயற்சி செய்தாலும் அது நடக்காது என்று தனக்கு நன்கு தெரியும் என்றார். பொது செயலாளர் சசிக்கலா சிறைக்கு செல்லும் நிலையில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க கைகாட்டியதால் தான் எடப்பாடி நியமனம் செய்யப்பட்டார் என்று கூறினார்.

தமிழகத்தில் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாக்கள் சிறப்புடன் நடைபெறும் என்றும் கட்சி அலுவலகத்திற்கு பொருப்பில் உள்ளவர்கள் மற்றும் தொண்டர்கள் செல்வதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் தேவைப்படும் போது நான் அங்கு செல்வேன் என்றார்.

ஒருசில அமைச்சர்கள் பயத்தினால் தான் என்னை கட்சியில் இருந்து ஒதுக்குவதாக கூறியதாகவும் விரைவில் அவர்களின் பயம் தெளிவடையும் என்றார். கட்சி செயல்பாடு பொருப்புகள் குறித்த விஷயத்தில் பொது செயலாளர்தான் முடிவு தான் செல்லும் என்றும் தற்போது பொது செயலாளர் சிறையில் உள்ளதால் அடுத்த கட்டத்தில் இருக்கும் தான் எந்தவித முடிவுகளையும் எடுப்பதாக தெரிவித்தார்.

வரும் 2019 ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்றார். தற்போது தான் கட்சியை பலப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கூறினார்.

தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். பிளவுபட்டுள்ள அதிமுக அணியை இணைப்பது குறித்து விரைவில் நல்ல செய்தியை வெளியிட  உள்ளதாக கூறினார்.

தமிழக மக்களின் நலன் கருதியே குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக ஆதரவளித்தாக தெரிவித்தார்.