திருத்தணி அருகே அதிமுக கவுன்சிலர் ஆறுமுகம் இன்று மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி 13-வது வார்டு கவுன்சிலரான ஆறுமுகம், நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டவர்.

இவர் இன்று காலை வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது ஆறுமுகம் அருகே வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்ருந்த அரிவாளால் கவுன்சிலர் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆறுமுகத்தை அருகில் இருந்தவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். பின்னர் ஆறுமுகத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி கவுன்சிலர் ஆறுமுகம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு கவுன்சிலர் ஆறுமுகம் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு கேட்டும் போலீசார் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் இன்று அவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
