மத்திய அரசு ஆதார் கார்டை அறிமுகம் செய்தது. இதில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கருவிழி, கைரேகை ஆகியவை பதிவு செய்து வருகின்றனர். இதையொட்டி, தற்போதைய நிலவரத்தில் ஆதார் கார்டு இல்லாமல் எந்த பொருளும் வாங்க முடியாத நிலை உள்ளது.

வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு பெற, முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி தொகை பெறுவதற்கு, வங்கிகளில் கணக்கு துவங்க, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறை எடுத்து தங்கவும்கூட ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டுக்கான புகைப்படம் எடுக்கும் பணி சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களிலும் நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் காலை முதல் காத்திருந்து, புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

இந்நிலையில், சென்னை ஷெனாய் நகரில் உள்ள மாநராட்சி மண்டலம் 4ல் இன்று காலை முதல் ஏராளமான மக்கள் காத்திருந்தனர். 10 மணிக்கு அங்கு வந்த அதிகாரிகள், ஆதார் கார்டுக்கான புகைப்படம் எடுக்கவில்லை. பிரின்டர், ஸ்கேன் மெஷின் பழுதாகிவிட்டது என கூறி அவர்களை திருப்பி அனுப்பினர்.

இதனால், காலை முதல் காத்திருந்த மக்கள், அதிகாரியை முற்றுகையிட்டு, இதை ஏன் முன்னதாக தெரிவிக்கவில்லை என கோஷமிட்டனர். இதையடுத்து, அங்கு அறிவிப்பு பலகையை வைத்தனர்.

இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, 3 நாட்களாக இங்கு பிரின்டரும், ஸ்கேன் மெஷினும் பழுதாகி இருக்கிறது. 3 நாட்கள் விடுமுறையாகிறது. அதன்பின், அதை சரி செய்வதற்கு ஆள் வரவேண்டும். அவர் வந்த பிறகுதான், நாங்கள் ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்க முடியும் என்றனர்.

அதேபோல், அயனாவரம் தாலுகா அலுவலகத்தில், விண்ணப்ப படிவம் இல்லாமல் உள்ளது. இதனால், அங்கு வரும் பொதுமக்களை, வரும் 27ம் தேதி வந்து விண்ணப்ப படிவம் பெற்று செல்லுங்கள். அந்த விண்ணப்பத்தில் நாங்கள் குறிப்பிடும்தேதியில் வந்து புகைப்படம் எடுத்து கொள்ளுங்கள் என கூறி அனுப்பினர். இதனால், பொதுமக்கள்  தங்களை, அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே நாங்கள், பலமுறை தாலுகா அலுவலகத்துக்கு அலைக்கழிக்கப்படுகிறோம். இதில் மெஷின் ரிப்பேர், விண்ணப்பம் இல்லை என ஏதாவது சொல்லி எங்களை மிகவும் சிரமப்படுத்துகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.