கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுப்பது குறித்து ஏடிஜிபி மாகாளி ஆய்வு மேற்கொண்டார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்பட முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ளன. இந்த சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் அடிக்கடி விபத்துகளும், உயிர் இழப்புகளும் நடந்து வருகின்றன.

குறிப்பாக கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதம் மேலுமலை அருகில் நடந்த விபத்தில் 20 பேரும், ஜூலை மாதம் சின்னாறு அருகே நடந்த விபத்தில் 8 பேரும் பலியானார்கள். இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் விபத்துகளை தடுக்க காவல் துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு பகுதியாக தமிழக கூடுதல் டி.ஜி.பி. மாகாளி நேற்று கிருஷ்ணகிரி வந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த அவரை சேலம் சரக டிஐஜி நாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வீரராகவன், தமிழரசி, ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன், கிருஷ்ணகிரி உதவி காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

இதில் கூடுதல் டி.ஜி.பி. மாகாளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நிகழும் மேலுமலை, சின்னாறு, காவேரிப்பட்டணம் பிரிவு சாலை, திம்மாபுரம் பிரிவு சாலை உள்ளிட்ட சாலைகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர், விபத்துகளை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்ட இயக்குநர் நாராயணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அசோகன், பழனிசாமி, ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் முத்துசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்தமிழ் செல்வராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.