additional security for judge kribakaran for his judgement regarding lawyers
ஒரு வழக்கில் தீர்ப்பு கொடுத்த நீதிபதிக்கு போலீஸார் கூடுதல் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். அதுவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரனுக்கு!
திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பார் கவுன்சிலில் பதிவு செய்திருந்தவர்களை பார் கவுன்சிலில் இருந்து நீக்க பரிந்துரை செய்து தீர்ப்பு கொடுத்தார் நீதிபதி கிருபாகரன். இவரது உத்தரவினால் 700க்கும் மேற்பட்டோர் பார் கவுன்சிலில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிபதி கிருபாகரனின் இந்தத் தீர்ப்பினால், அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி, கூடுதல் பாதுபாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம், நேரடியாக எம்.ஏ., பட்டம் பெற்ற 713 வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்ய தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அதிரடியாக உத்தரவிட்டார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றை நிர்வகிப்பதில் இரு தரப்புக்கிடையே ஏற்பட்ட பிரச்னையால், அக்கல்லூரியில் பயின்ற 17 மாணவர்கள் தங்களை வேறு கல்லூரிக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவில், ‘‘வழக்கறிஞர்கள் எனக் கூறிக்கொண்டு சிலர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையும் தயங்குகிறது. சில நேரங்களில் காவல் துறையும் அவர்களுடன் கைகோர்த்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறது.
தமிழகத்துக்கு வெளியே உள்ள லெட்டர்பேடு சட்டக் கல்லூரிகளில் சட்டப் படிப்பு பட்டத்தை விலை கொடுத்து வாங்கும் சிலர்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே, கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் எத்தனை சட்ட மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். அதில் எத்தனை பேர் வெற்றிகரமாக படிப்பை முடித்துள்ளனர். எத்தனை பேர் வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர் என்ற விவரத்தை அகில இந்திய பார் கவுன்சில் சமர்ப்பிக்க வேண்டும்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் மீது காவல்துறை இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு பார் கவுன்சில் பொறுப்புத் தலைவராகப் பதவி வகிக்கும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவரான வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட பலர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில்,
தமிழக பார் கவுன்சிலில் 713 பேர் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடிக்காமல், நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்று வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, அவர்களின் வழக்கறிஞர் பதிவை உடனடியாக ரத்து செய்ய நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும்.
ஆவணங்களே இல்லாத 42 வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பார் கவுன்சில் அனுப்பி வைக்கும் சான்றிதழ்களை சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் சரிபார்ப்பதில்லை.
தற்போது தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லை. எனவே, அரசு தலைமை வழக்கறிஞர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இக்குழுவில் இருக்கக் கூடாது... அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
உண்மையான வழக்கறிஞர்களை வைத்துதான் பார் கவுன்சிலையும் நடத்த வேண்டும் என்பதால்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
- நீதிபதி கிருபாகரன் இவ்வாறு உத்தரவிட்டு, மேற்கொண்டு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு, அவர்களின் கல்விச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நோட்டீஸ் அளிக்கும்படி பார் கவுன்சில் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, நீதிபதி கிருபாகரன் அளித்த உத்தரவால், 700க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவருக்கு போலீஸார் கூடுதல் பாதுகாப்பை அளித்து வருகின்றனர்.
