Asianet News TamilAsianet News Tamil

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம்: திமுகவில் வலுக்கும் எதிர்ப்பு!

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு திமுகவில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன

Actor vijay politics entry k veeramani rs bharati oppose
Author
First Published Aug 10, 2023, 10:50 AM IST

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் செய்து வருகிறார். அவரது மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருவதால், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட இடங்களில் வெற்றியும் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பரிசுகள் வழங்கினார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில், 'விஜய் பயிலகம்' என்ற பெயரில், 234 சட்டமன்றத் தொகுதிகளில் இரவு பாடசாலை துவக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கறிஞர் அணியினர் உள்ளிட்டோருடன், ஆலோசனை நடத்தியுள்ள நடிகர் விஜய், விரைவில், மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, அரசியல் களமிறங்க, நடிகர் விஜய் மிக வேகமாக ஆயத்தமாகி வருவதாக கூறப்படும் நிலையில், பூத் ஏஜன்டுகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு திமுகவில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ஒரு சில நலத் திட்டங்களை செய்து விட்டு, நான்கு சினிமாவில் நடித்து விட்டு, இரண்டு மன்றத்தை ஆரம்பித்து விட்டால், உடனே கட்சி ஆரம்பிக்க வேண்டிய எண்ணம் சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது என விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பொம்மன் - பெல்லியை பெருமைப்படுத்தவே இந்த பெயர் - உதயநிதி தகவல்!

அதேபோல், தனியார் செய்தி இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்துள்ளார். அந்த செய்தி இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள அவர், “தேர்தலில் நிற்கும் ஆசை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதற்கு அரசியல் சட்டப்படி குறிப்பிட்ட வயது இருக்க வேண்டும். தேர்தலில் நிற்க பைத்தியக்காரனாக இருக்கக்கூடாது. இந்த 2 தகுதியும் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். சினிமா துறையில் கெட்டிக்காரராக இருப்பதால், உடனே முதலமைச்சர் ஆகிவிடுவேன் என்பது வேடிக்கை. மக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆசை இருந்தால் குதிரையில் சவாரி செய்யலாம். அந்த குதிரைகள் பல நேரங்களில் மண் குதிரைகளாக மட்டுமல்ல, பொய்க்கால் குதிரைகளாகவும் இருந்துவிடும்.” என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios