தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் அவ்வப்போது சில ஆச்சரியங்கள் நிகழ்வதுண்டு. நடிகர் சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் அந்த ஆச்சரியத்தை நிகழ்த்தியுள்ளது.

தமிழகமே பருவ மழை பொழியாமல் வறட்சியும், தண்ணீர் தட்டுப்பாட்டிலும் தவித்துக்கொண்டிருக்க மேட்டூர் அணை ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியதற்கு இணையானது கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியை புகழ்ந்துள்ளார் திரையரங்க குத்தகைதாரர் .  படம் ரிலீஸ் ஆன முதல் இரண்டு நாட்கள் இப்படத்தின் வசூல் குறைவாகவே இருந்துள்ளது. மூன்றாம் நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்த வசூல் குறையாமல் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.

மக்களின் மனங்களைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் தோற்பது இல்லை என சொல்வதைப்போல  தமிழ்நாடு முழுவதும் கடைக்குட்டி சிங்கம் முதல் வார முடிவில் சுமார் 17 கோடி வரை மொத்த வசூல் ஆகியுள்ளது. 

இந்த நிலையில்  கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா இன்று வடபழனியில் நடந்தது. இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

கடைக்குட்டி சிங்கம் படத்தின் கதை விவசாயிகளை மையமாக கொண்டது என்பதால் விவசாய சங்க பிரதிநிதிகளும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். விழாவில் விவசாயிகளுக்கு தனது அகரம் பவுண்டேசன் சார்பில் நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதி வழங்கினார். விவசாயம் மற்றும் விவசாய மேம்பாடு, ஆராய்ச்சிக்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சூர்யா குறிப்பிட்டார்.

 மேலும், விவசாயப் பணிகள் 'அகரம் ஃபவுன்டேஷன்' மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அந்தப் பணம் எப்படி எல்லாம் பயனுறப்போகிறது என்பது பற்றி அறிவிப்பு வெளியாகும் என சூர்யா தெரிவித்தார்.