Actor Raghava Lawrence fan dies in accident
நடிகர் ராகவா லாரன்சுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்மன்ற நிர்வாகி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்கில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

நடன இயக்குநராக பல படங்களில் பணிபுரிந்த ராகவ லாரன்ஸ், கதநாயகனாக முனி, காஞ்சனா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது முனி 3 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
2018 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்சுக்கு, வாழ்த்து சொல்வதற்காக, கடலூர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராகவா லாரன்ஸ் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் 8 பேர், புத்தாண்டு தினத்துக்கு முந்தைய நாள் சென்னைக்கு காரில் புறப்பட்டனர்.

கார் திண்டிவனம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மாவட்ட அமைப்பாளர் ராக்கி சேகர் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அவர்களை, அருகில் இருந்தோர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பெற்று வந்த ராக்கி சேகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு நடத்தப்பட்டது.

ராக்கி சேகர் உயிரிழந்ததை அறிந்த ராகவா லாரன்ஸ், கடலூர், புதுப்பாளையம் சென்று ராக்கி சேகரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய லாரன்ஸ் கண்கலங்கினார். இதன் பின்னர் ராகவா லாரன்ஸ், உயிரிழந்த ராக்கி சேகரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
