முதலமைச்சர் உள்பட அனைத்து பிரமுகர்களும் கலந்து கொள்ளும் வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவை நடத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என நடிகர் பிரபு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்காக அடையார் சத்யா ஸ்டூடியோ எதிரே ஒதுக்கி கொடுத்தது தமிழக அரசு. 

ஆனால் நடிகர் சங்கம் காலம் தாழ்த்தவே தமிழக அரசே முன்வந்து சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. 

அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் நீண்ட நாட்களாக திறப்பு விழா குறித்து தமிழக அரசு வாய்திறக்காமல் இருந்தது. 

இதைதொடர்ந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்படும் எனவும், காலை 1௦.3௦ மணிக்கு அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கடம்பூர் ராஜூ மணிமண்டபத்தை திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு, தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், தனது அப்பாவுக்கு மணி மண்டபம் கட்டுவது, புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் கனவு திட்டம் எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால்  நிச்சயம் இந்த மணிமண்டபத்தை அவர் திறந்திருப்பார் எனவும் தெரிவித்துள்ளார். 

அது நடந்திருந்தால்  நடிகர் திலகத்தின் ஆன்மாவுக்கு திருப்தி கிடைத்திருக்கும் எனவும், தமிழக அரசு  தந்தை சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஒரு மிகப்பெரிய நடிகரின் மணிமண்டபத் திறப்பு விழாவில் முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் கலந்து கொள்ளாதது எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும்,  சிறிய விழாவாக நடத்துவது தமிழ் திரைப்படங்களுக்கும், தமிழ் மொழிக்கும் அவர் செய்த சாதனைகளுக்கு  ஏற்பட்ட  அவமரியாதையாகவே  கருத வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

எனவே, இந்த விழாவில் முதலமைச்சர் உள்பட அனைத்து பிரமுகர்களும் கலந்து கொள்ளும் வகையில் மணிமண்டப திறப்பு விழாவை நடத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும் எனவும், என கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.