ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்க்கும் 'பீட்டா' அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் நடிகை திரிஷாவுக்கு நடிகர் கருணாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம், போராட்டம், மனித சங்கிலி, சாலை மறியல் உள்பட பல்வேறு வகையில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்துள்ளது.

இதற்கிடையில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த 'பீட்டா' அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த 'பீட்டா' அமைப்புக்கு நடிகை திரிஷா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதனால், நடிகை திரிஷாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதைதொடர்ந்து, சிவகங்கை பகுதியில் நேற்று நடந்த திரிஷாவின் 'கர்ஜனை' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சென்ற தமிழ் ஆர்வலர்கள், ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகர் கருணாஸ், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

'பீட்டா' அமைப்புக்கு ஆதரவளிக்கும் நடிகை த்ரிஷாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன். அவர், ஜல்லிக்கட்டு எதிர்ப்பு தெரிவித்து வந்தால், அவரது படப்பிடிப்பு நடைபெறுவதை தடுத்து நிறுத்துவோம். நடிகர் சங்க துணை தலைவர் என்ற அடிப்படையில் திரிஷாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அடுத்த ஆண்டில் உச்சநீதிமன்ற அனுமதியோடு ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.