கல்விக்கு தமிழக அரசு எப்பொழுதும் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக புகழாரம் சூட்டிய நடிகர் கார்த்தி, மாணவர்கள் கல்வியை கெட்டியகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய முதல்வர், “மாணவர்களான உங்களைப் பார்க்கும்போது, எனக்குள்ளே புது vibe வந்துவிட்டது. மடிக்கணிணி வழங்குகின்ற நிகழ்ச்சிக்கு இந்த நிகழ்ச்சிக்கு எதற்கு “உலகம் உங்கள் கையில்!” என்ற தலைப்பை வழங்கியிருக்கிறோம் தெரியுமா! இது வெறும் தலைப்பு இல்லை; அதுதான் உண்மை! எதிர்காலமே உங்கள் கையில் தான் இருக்கிறது! அதை உரக்கச் சொல்லி, உணர்த்துவதற்கு தான் இத்தனை பேரும் இந்த விழாவிற்கு வந்திருக்கிறீர்கள்!

என்னைப் பொறுத்தவரைக்கும், என்னுடைய எண்ணம் எல்லாம் என்ன தெரியுமா? நீங்கள் என்ன படிக்கிறீர்கள்? எத்தனை டிகிரி வாங்குகிறீர்கள்? என்ன வேலைகளில், எவ்வளவு பெரிய உயர்பொறுப்புகளில் இருக்கிறீர்கள்? சக்சஸ்ஃபுல்லாக, சொந்தமாக தொழில் நடத்துகிறீர்களா? உங்களால் எத்தனை பேருக்கு வேலை வழங்க முடிகிறது? உங்களுடைய வளர்ச்சியால் நீங்கள் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்வீர்கள்? சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், இன்றைக்கு இருக்கின்ற இளைய சமுதாயம், மதிப்புமிக்க மனிதர்களாக, பெருமைமிக்க மனிதர்களாக, உயர்ந்து நிற்கவேண்டும்! எல்லோரையும் வாழ வைக்கவேண்டும்! இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் எண்ணம்!

இனிமேல், டெக்னாலஜியை படிப்பது என்பது ஆப்ஷன் கிடையாது; உங்கள் ஃபீல்டில் நீங்கள் நிலைத்து நிற்பதற்கு அவசியமாக இருக்கிறது! தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது! எல்லாவற்றிக்கும் மேலாக எல்லோருடைய கைகளுக்கும் அது வந்துவிட்டது! அதை முறையாக பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும். ஆனால் நான் ஒன்று சொல்கிறேன் - ஏ.ஐ.-ஆல் ஒருபோதும் மனிதர்களை நாம் ரீ-பிளேஸ் செய்ய முடியாது! நம்முடைய வேலைகளை இன்னும் விரைவாக செய்வதற்கும், இன்னும் சிறப்பாக செய்வதற்கும் தான் ஏ.ஐ. துணை நிற்கும்! ஸ்கில் அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் நிறைய உருவாகியிருக்கிறது! அதையெல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்!

இன்றைக்கு உங்கள் கைகளில் வந்திருக்கின்ற லேப்டாப்பை - சும்மா படம் பார்க்க, கேம்ஸ் விளையாட, பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்களா? இல்லை, உங்கள் கரியருக்கான லாஞ்ச்-பேட்-ஆக பயன்படுத்திக் கொள்ள போகிறீர்களா? இதுதான் நாங்கள் உங்கள் முன்னால் வைக்கக்கூடிய கேள்வி! எல்லாவற்றுக்குமே நல்லது, கெட்டது என்று இரண்டு சைடு இருக்கிறது. அதில் நீங்கள் எந்த சைடை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதைப் பொறுத்துதான் வெற்றி உங்கள் சைடு வரும்! நான் சொல்வதெல்லாம், உங்கள் கரியர் எதுவாக இருந்தாலும், அதில் நீங்கள்தான் டாப் பொசிஷனில் இருக்கவேண்டும்! வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில், நாம் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது, உங்களுடைய வெற்றியைச் சொல்லி, நீங்கள் மகிழ்ச்சி அடையவேண்டும்; அதில் தான் நான் பெருமைப்படவேண்டும்!” என்றார்.

விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்திற்கு என ஒரு சிறப்பு இருக்கிறது. ஒரு மாணவன் நன்கு படிக்கின்றான் என்றால் குடும்ப சொத்தை விற்றாவது அவனை படிக்க வைக்க வேண்டுமென கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தான் தமிழ்நாடு.

நான் சினிமாவுக்கு செல்கிறேன் என அப்பாவிடம் கூறியபோது படிப்பு மட்டுமே உன் வாழ்க்கைக்கு கை கொடுக்கும் ஆகவே உன் படிப்பில் கவனம் செலுத்து என கூறினார். அதன் அடிப்படையில் இன்ஜினியரிங் முடித்தேன். பல நேரங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு கல்வி தான் உதவி செய்கிறது.

நான் அமெரிக்காவில் படித்தபோது அங்கு முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தான். AI வளர்ச்சி அடைந்துவரும் இந்த சூழலில் அரசு மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்குவது மிகவும் முக்கியமான அம்சம். இப்படிப்பட்ட சூழலை உருவாக்கிக் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி. AI மூலம் வேலை பறிபோகும் என்று சிலர் எச்சரிக்கின்றனர். ஆனால் பல தொழில் முனைவோர்கள் இந்தியாவில் இது வளர்ச்சி அடையும் என்று கூறுவதாக” தெரிவித்தார்.