தமிழகத்தில் கடுமையான வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட 125 விவசாய குடும்பங்களுக்கு நடிகர் தனுஷ் 50 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். 

நடிகர் தனுஷ் தனது குடும்பத்தாருடன் குல தெய்வ வழிபாட்டுக்காக தனது சொந்த கிராமமான தேனி மாவட்டம், தேவாரம் அருகில் உள்ள சங்கராபுரம் கருப்பசாமி கோயிலுக்கு வந்திருந்தார்.

அப்போது அவர், தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 125 விவசாய குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.

அப்போது பேசிய தனுஷ், விவசாயிகளுக்கான இந்த உதவியை, என் அம்மா பிறந்த இந்த சங்கராபுரம் கிராமத்தில் கொடுப்பதைப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் என்று கூறினார்.

பத்திரிக்கையாளர் ராஜீவ் காந்தியின் கொலைகள் விழுந்த நிலம் என்ற குறும்படத்தை பார்த்த பிறகு, விவசாயிகளுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியதாகவும் அதனால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக
சுமார் 250 பேரின் தகவல்களை திரட்டியதாகவும், அதில் இருந்து 125 குடும்பங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 50 ஆயிரம் ரூபாயை வழங்கியதாகவும் நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

விவசாயிகளின் தகவல்களை திரட்டுவதற்காக, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஆகியோர் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வு நடத்தி உள்ளார்.