பிரச்சாரத்தின்போது திடீர் உடல் நலக்குறைவு.. ICUவில் மன்சூர் அலி கான் - பழச்சாறில் விஷம் கலக்கப்பட்டதா?
Mansoor Ali Khan : பிரபல நடிகர் மன்சூர் அலி கான் நேற்று குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார், அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
நாளை ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியா முழுவதிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெறும் இந்த வாக்குப்பதிவுக்குப் பிறகு, ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட உள்ளார் பிரபல நடிகர் மற்றும் அரசியல் தலைவர் மன்சூர் அலிகான் அவர்கள்.
தேர்தல் நடத்தை விதிகளின்படி நேற்று ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணியோடு தேர்தல் பரப்புரையானது முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் நேற்று காலை முதல் ஆம்பூர் வாணியம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். நேற்று இறுதியாக அவர் குடியாத்தம் பகுதியில் தான் பரப்புரை நடத்தினார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டுவரப்பட்ட அவர் நேற்று மாலை 6:00 மணி அளவில் கே கே நகரில் உள்ள மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.
தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் மன்சூருக்கு தொடர்ச்சியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மன்சூர் அலிகான் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் நேற்று குடியாத்தம் சந்தை பகுதியில் இருந்து திரும்பி வந்த பொழுது ஒரு இடத்தில் தனக்கு கட்டாயப்படுத்தி பழச்சாறு வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அதனை குடித்த பிறகுதான் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என்றும், வண்டியில் இருந்து கீழே விழ இருந்த தான் மயக்கம் அடைந்து நெஞ்சுவலியில் துடித்ததாகவும் அவர் கூறினார். அதன் பிறகு குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் தனக்கு வலி நிற்கவில்லை என்றும், அதனால் தான் சென்னைக்கு விரைந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தற்பொழுது ICUவில் இருக்கும் மன்சூர் அலிகான் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் அனுமதித்த பிறகு அவர் வீடு திரும்பலாம் என்றும் அறிக்கைகள் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே வீடு வீடாக பணப்பட்டுவாடா? இணையத்தில் வைரலாகும் வீடியோ