தூத்துக்குடி
 
தூத்துக்குடியில், தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200–க்கும் மேற்பட்ட பகுதிகளில் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். 

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, அவர்கள் "கூலி உயர்வு" கேட்டு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினர். இதனையடுத்து 150 தீப்பெட்டிகளில் மருந்து முக்கிய குச்சிகளை அடைப்பதற்கு கூலி ரூ.5–ல் இருந்து ரூ.6 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. 

ஆனாலும், தீப்பெட்டிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லைஎன்று பெரும்பாலான தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கவில்லை.

இதனையடுத்து கோவில்பட்டி, வீரவாஞ்சிநகர், கிழவிபட்டி, செண்பகபேரி, இனாம் மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு நேற்று தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன்பின்னர் அவர்கள், "கூலி உயர்வு வழங்க வேண்டு" என்று வலியுறுத்தி நேற்று காலையில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், சி.ஐ.டி.யு. மோகன்தாஸ், கிருஷ்ணவேணி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, வட்டார காங்கிரஸ் தலைவர் ரமேஷ்மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் பரமசிவன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர், "கூலி உயர்வு வழங்காத தொழிற்சாலைகளின் பட்டியலை பெற்று, அந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்களை அழைத்து பேசி, தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கவும், கூலி உயர்வு வழங்காத தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்" என்று உறுதியளித்தார். 

இதனைகேட்டு திருப்தியடைந்த தீப்பெட்டி தொழிலாளர்கள் தங்களது காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.