Accusation of the collector
பணம் வாங்கிக் கொண்டு, சத்துணவு பணி நியமனம் செய்ததாக புதுக்கோட்டை ஆட்சியர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் தெரவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ராஜேந்திரபுரத்தை சேர்ந்தவர் கருப்பையாவின் மகள் தமிழ்ச்செல்வி. சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும், இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேசனை, நேரில் ஆஜராக, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெண்கள் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்துக்கு புகார் மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில் தமிழ்ச் செல்வி, கடந்த ஜனவரி மாதம் நடைப்பெற்ற சத்துணவு அமைப்பாளர் பணிக்காக விண்ணப்பம் செய்திருந்ததாகவும், இதற்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடந்ததாகவும் அதில் கூறியிருந்தனர். மேலும், இந்த பணிக்கு என்னைப்போல் 32 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள் எனவும், அதில் பணி நியமனம் பெற அனைத்து தகுதி இருந்தும், தனக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் அதில் கூறியுள்ளனர்.
இது குறித்து ஆட்சியர் கணேசன், நேர்முக உதவியாளர் முத்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் அவர்கள் கூறியிருந்தனர். மேலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அன்பானந்தம் உள்ளிட்டோரிடம் 3 லட்சத்துக்கும் மேல் பணம் வாங்கிக் கொண்டு பணி ஆணை வழங்கியிருப்பதாகவும்,, இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டியும் அவர்கள் மனு கொடுத்தனர்.
பணத்தை வாங்கிக் கொண்டு, பணி ஆணை வழங்கியதாக மாவட்ட ஆட்சியர் மீதே குற்றம் சாட்டி இருப்பது புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
