திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதிகளை விரட்டிச் சென்ற போக்குவரத்து போலீஸ் அவர்களை எட்டி உதைத்ததில் தடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் உட்கார்ந்திருந்த உமா என்ற 3 மாத கர்ப்பிணிப்  பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவெறுப்பூரைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் தனது மனைவி உமாவுடன்  இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தர்மராஜ் ஹெல்மெட் அணியாமல் சென்ற நிலையில் ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசார் அவரை நிறுத்தச் சொல்லியுள்ளனர்.

ஆனால் தர்மராஜ் நிற்காமல் சென்றதால்,. மற்றொரு இரு சக்கர வாகனத்தில் அவர்களை விரட்டிச் சென்ற போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ்  ஒரு கட்டத்தில் அவர்கள் சென்ற வாகனத்தை எட்டி உதைத்தார்.

இதில் கணவன் – மனைவி இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது எதிரே வந்த வேன் ஒன்று தம்பதிகள் மீது மோதியது. இதில் 3 மாத கர்ப்பிணயான உமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தர்மராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் போலீசைக் கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த தப்பிச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் போலீஸ் வாகனத்தின் மீது கல் வீசித்தாக்கினர்.

இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்  கல்யாண்  சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். காவல் ஆய்வாளர் காமராஜ்  உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின்போது காமராஜ் மது போதையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.