கிழக்கு கடற்கரை சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் ஒன்று சாலையில் சென்றுக் கொண்டிருந்த மூதாட்டி மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.

மேலும், கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக சென்ற ஷேர் ஆட்டோ மீது மோதியதில், அதில் பயணம் செய்த 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் விடுமுறை நாட்களில் கார் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்த நேரங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது, இதுபோன்ற கோர விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் நேற்று காலை கோவளத்தில் இருந்து தனியார் கால்டாக்சி திருவான்மியூர் நோக்கி சென்று கொண்டருந்தது. அதனை ஆண்டனி சார்லஸ் என்பவர் ஓட்டினார். இரவு முழுவதும், நெடுந்தூரத்தில் இருந்து காரை ஓட்டியதால், அவர் தூக்க கலக்கத்தில் இருந்தார்.

நீலாங்கரை அருகே பிரார்த்தனா தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மூதாட்டி சாலையின் குறுக்கே வந்தார். திடீரென அவர் வந்ததை பார்த்த அவர், உடனடியாக காரில் இருந்த பிரேக்கை பிடித்தார். ஆனால், கார் தறிக்கெட்டு ஓடி, மூதாட்டி மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மூதாட்டி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அவ்வழியாக சென்ற ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில், அந்த ஷேர் ஆட்டோ, சாலையின் நடுவே தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த டிரைவர் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மூதாட்டி சடலத்தை கைப்பற்றி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், ஆட்டோ கவிழ்ந்து படுகாயமடைந்தவர்களில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, 4 பேர், அப்பல்லோ மருத்துவமனை, ஒருவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, இறந்த மூதாட்டி சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வசந்தி என தெரிந்தது. தொடர்ந்து போலீசார், விசாரிக்கின்றனர்.