தஞ்சாவூர் 

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு தங்க சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக முன்னாள் செயல் அலுவலரை மற்றும் ஸ்தபதி ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு காவலாளர்கள் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் இருந்த நவபாசான மூலவர் சிலை கடந்த 2004-ஆம் ஆண்டு சேதமடைந்ததாக கூறி புதிதாக தங்கத்தால் சிலை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. 

இந்த புதிய சிலையை வடிவமைக்க 10 கிலோ தங்கம் திருத்தணி முருகன் கோயிலில் இருந்து கடனாக பெறப்பட்டதாம். 

புதிய சிலையை வடிவமைக்கும் பொறுப்பு காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாகத்தைச் சேர்ந்த ஸ்தபதி முத்தையாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலையை அவர் வடிவமைத்தார்.

இதில் பெரும் முறைகேடு நடந்ததாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், புதிதாக தங்க சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்ததாக பழனி தண்டாயுதபாணி கோவிலின் முன்னாள் செயல் அலுவலர் கே.கே.ராஜா, சிலையை செய்த ஸ்தபதி முத்தையா ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலாளர்கள் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். 

அவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து மேற்கோண்டு விசாரிக்க காவலாளார்கள் முடிவெடுத்துள்ளனர்.

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு தங்க சிலை செய்ததில் முறைகேடு நடந்த சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.