about don sridhar

இண்டர்போல் உதவியுடன் தமிழக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதர். கம்போடியாவில் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

யார் இந்த ரவுடி ஸ்ரீதர்? அவரின் பின்னணி என்ன? 

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பருத்திக்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் தனபாலன். இவர் மீது கொலை, ஆள்கடத்தல், நில அபகரிப்பு என 45-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டிருந்த சக்கரவர்த்தி என்பவரிடம் ஸ்ரீதர் முதலில் வேலை செய்தார். அவரிடம் தொழிலை கற்றுக்கொண்ட ஸ்ரீதர், அவருடனேயே இணைந்து தொழிலில் சாராய தொழிலில் ஈடுபட்டார். பின்னர் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், புதுச்சேரி என்று பல்வேறு பகுதிகளில் சாராயத் தொழிலை விரிவுபடுத்தினார். சக்கரவர்த்தியின் மகளையே திருமணமும் செய்துகொண்டார்.

தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க கூலிப்படையை உடன் வைத்துக் கொண்டார். அந்தப் படைதான் இன்றளவும் ஸ்ரீதர் கோலோச்சுவதற்கு முக்கிய காரணம். தமிழ்நாட்டைக் கடந்து ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களிலும் ஸ்ரீதரின் சாராய வியாபாரம் சக்கைபோடு போட்டது. தொழில் வளர வளர வஞ்சனையில்லாமல் காவல்துறையின் மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை செலவு செய்தார் ஸ்ரீதர். காவல்துறையின் மேலதிகாரிகளிடம் நட்பு வைத்துக் கொண்டு வியாபாரத்தை தொடர்ந்ததால், நேர்மையான கீழ்மட்ட அதிகாரிகளால் கூட ஸ்ரீதரை நெருங்க முடியவில்லை.

நில அபகரிப்பு, ஆள்கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டார். 

நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு ஏதாவது ஒரு சிறு தொகையை மட்டும் கொடுத்துவிட்டு அடிமாட்டு விலைக்கு நிலங்கள் விற்பனையாகிவிடும். ஸ்ரீதரின் பின்னணி தெரிந்தவர்கள் யாரும் காவல் நிலையம் செல்வதில்லை. அவர் மீதான பயத்தையும் கடந்து பலர் அவர் மீது புகார்கள் அளித்தனர். ஸ்ரீதரை பற்றி எந்த தகவலை விசாரித்தாலும், விசாரித்தவரைப் பற்றிய அனைத்து விஷயங்களும் ஸ்ரீதரின் ஆட்களுக்கு அனுப்பி வைத்துவிடும் விசுவாசிகள் இன்றளவிலும் காவல்துறையில் இருந்துள்ளனர்.

ஸ்ரீதர் மீது 5 கொலை, 8 கொலை முயற்சி, 4 ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, நில உரிமையாளர்களை மிரட்டுதல், அடிதடி, செம்மரம் கடத்தல் உட்பட எண்ணிலடங்கா வழக்குகள் காஞ்சிபுரம் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ஸ்ரீதரின் குற்றச்செயல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செல்ல, அவரை என்கவுண்டரில் போடப்போவதாக ஒரு தகவல் வெளியாகியது. 

தன்னை விரட்டிவந்த போலீசாரிடம் இருந்து தப்பிக்க, சென்னை விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அதன் நுழைவாயிலில் மோதி நின்றது. இதையடுத்து அவரை மத்திய தொழிலக பாதுகாப்புப்படையினர் கைது செய்ததால் என்கவுண்டரில் இருந்து தப்பினார்.

ஆனால் ஸ்ரீதரின் பாஸ்போர்ட்டை போலீசார் முடக்க தவறியதால் நேபாளம் வழியாக துபாய்க்கு தப்பி சென்றார் ஸ்ரீதர். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து பிடியை இறுக்கிய தமிழக போலீசார், அவரை கைது செய்ய இண்டர்போல் போலீஸ் உதவியையும் நாடினர்.

ஸ்ரீதரின் சொத்துகள் முடக்கப்பட்டன. குடும்பத்தினருக்கு பிரச்னை ஏற்பட்டதால் அவர்களும் ஸ்ரீதர் மேல் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த ஸ்ரீதர் கம்போடியாவில் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் உறுதி செய்தபோதிலும், ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகிய தகவலின் உண்மைத் தன்மையை ஆராயும் பணியை தமிழக போலீசார் மேற்கொண்டுள்ளனர்.