இராமநாதபுரம்

அப்துல்கலாம் மணிமண்டபத்தைத் திறந்து வைக்க இராமேசுவரம் வருகை தரும் பிரதமர் மோடி தனுஷ்கோடியில் புதிய சாலையையும், இராமேசுவரம் – அயோத்தி இரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பில் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

“அப்துல்கலாம் தேசிய நினைவகம்” என்று பெயரிடப்பட்ட இந்த மணிமண்டப கட்டுமானப் பணிகளுக்கு அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மணிமண்டபத்தில் அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700–க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

அப்துல்கலாமின் 2–ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு இன்று காலை 10 மணிக்கு வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்கிறார்கள்.

பிரதமர் மோடி அங்கிருந்து இராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு மண்டபம் முகாமிற்கும், அதன்பின் கார் மூலம் புறப்பட்டு பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசியகொடி ஏற்றுகிறார். பின்பு மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார்.

பிறகு ராமேசுவரம் முதல் டெல்லி வரை செல்ல உள்ள ‘‘அப்துல்கலாம்–2020’’ என்ற சாதனை பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதனையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வருகிறார். அங்கு இராமேசுவரம் – அயோத்தி இடையேயான புதிய இரயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

அத்துடன், இராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரை போடப்பட்டுள்ள புதிய சாலையையும் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.

கடந்த 1964–ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர புயலால் அழிந்த தனுஷ்கோடியை புனரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக தனுஷ்கோடிக்கு புதிய சாலை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் தொடங்கப்பட்டது.

இதன்படி முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி வரை 5 கிலோ மீட்டர் தூரமும், தன்கோடி முதல் அரிச்சல் முனை வரை 4½ கிலோ மீட்டர் தூரமும் புதிய சாலை ரூ.9½ கோடி செலவில் அமைக்கப்பட்டது. இதன்பின்னர் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் சாலை திறப்பு விழாவிற்காக காத்திருந்தது.

இதனை பிரதமர், திறந்து வைத்து பயணிகள் போக்குவரத்திற்காக அர்ப்பணிக்கிறார். இதற்கான நிகழ்ச்சியும் பிரதமரின் விழாவில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.