ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலை அருகே பகவத் கீதை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதால், கலாமின் அண்ணன் பேரன் சலீம், பைபிள் மற்றும் குரான் புத்தகங்களை வைத்தது குறித்து அவரது குடும்பத்தினரிடம் மத்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர்.

ராமேஸ்வரத்தில் 15 கோடி ரூபாய் செலவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டு கடந்த 27 ஆம் தேதி அதை பிரதமர் மோடிதிறந்து வைத்தார்.

அந்த மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் சிலை அருகே, பகவத் கீதை வைக்கப்பட்டிருந்தது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் உடனடியாக பகவத் கீதையை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த சச்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம், அந்த சிலை அருகே பைபிள் மற்றும் குரான் புத்தகங்களை வைத்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்து மக்கள் கட்சியினர், சலீம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனைம் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்ட குரான் மற்றும் பைபிளை அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து அப்துல் கலாமின் அண்ணன் குடும்பத்தினரிடம் மத்திய உளவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.