முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், வெங்கயாநாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் 15 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணிமண்டபத்தில் அப்துல்கலாமின் 700 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 900 அப்துல்கலாம் ஓவியங்களும், ஒரே ஓவியத்தில் அப்துல்கலாமின் 50 புகைப்படங்களை கொண்ட ஓவியமும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மண்டபத்தை, அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

மேலும், மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் வீனை வாசிப்பது போன்ற சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதனைதொடர்ந்து அப்துல்கலாமின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், வெங்கயாநாயுடு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அப்துல்கலாம் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடிவிட்டு புகைப்படம் எடுத்துகொண்டார்.