ஆருத்ரா ஊழல்: சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு!
ஆருத்ரா ஊழல் வழக்கில் வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்த ஆர்.கே.சுரேஷை சிறப்பு நீதிமன்றத்தை நாட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36,000 வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதனை நம்பி அந்த நிறுவனத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வட்டிப் பணத்தை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக, தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், இந்த மோசடி தொடர்பாக, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, அந்த நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரீஷ், இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. விசாரணையின் அடிப்படையில், உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கிடையே, அவர் துபாய் சென்று தலைமறைவாகி விட்டார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவின் பின்னணி? எடப்பாடி பழனிசாமிக்கு டஃப் கொடுக்கப் போகும் சீமான்?
இதையடுத்து, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். மேலும், அவரது சொத்துக்களை முடக்கவும், அவரை இந்திய கொண்டுவரும் நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், வெளிநாட்டில் உள்ளதால் தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என உயர் நீதிமன்றத்தை அவர் நாடி இருந்தார்.
இதனிடையே, ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்தனர். இதனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், வங்கி கணக்கு முடக்கத்தால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த மனுவானது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட (TNPID) சிறப்பு நீதிமன்றத்தை நாட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.