aadhar must for applying petty shops in chennai corporation ordered by chennai high court
நீங்கள் பெட்டிக் கடை வைக்கப் போகிறீர்களா? அப்படி எனில் இனி உங்களுக்கு ஆதார் அவசியம் தேவைப்படும். காரணம், சென்னை உயர் நீதிமன்றம் சென்னையில் சாலையோர பெட்டிக்கடை வைக்க ஆதார் அவசியம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாலையோரம் பெட்டிக் கடை வைப்பதற்கு அனுமதி வழங்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு இட வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு இட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப் பட்ட போது, இவ்வாறு பெட்டிக்கடை உரிமம் பெறுபவர்கள், சில நாட்களில் அவற்றை வேறு நபர்களுக்கு விற்று விடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிமன்றம், இது தொடர்பாக ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, ஒரு நபர் பெட்டிக்கடை திறக்கப் போவதாக விண்ணப்பம் அளித்தால், அவரிடம் ஆதார் எண்ணை கட்டாயம் கேட்டுப் பெற வேண்டும். ஒரே நபர் அதிக பெட்டிக் கடைகளைத் திறப்பதைத் தடை செய்ய வசதியாக இது அமையும். அவ்வாறு ஒருவர் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கும் போது, அதனை ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை இவற்றின் அருகே பெட்டிக் கடை வைக்கவும், பெட்டிக் கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்கும் அனுமதி இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
