aadhaar card are kept in dust bin at krishnagiri

கிருஷ்ணகிரியில் நூற்றுக்கணக்கான ஆதார் அட்டைகள் குப்பை தொட்டியில் கிடந்தது கண்டறியப் பட்டது. பின் அவை குப்பைத் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்டன. இந்த நிகழ்வு கிருஷ்ணகிரியில் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி, அகசிப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கனகமுட்லு தபால் நிலையத்தின் மூலம் இந்த ஆதார் காடுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டியவையாம். ஆனால் இவை, உரியவர்களிடம் சேர்ப்பிக்கப் படாமல், இவ்வாறு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 

யதேச்சையாக, கிருஷ்ணகிரி நேதாஜி சாலையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இவற்றைக் கண்டுள்ளனர். வெறும் கவர்களாக இல்லாமல், ஆதார் கார்டுகளுடன் கூடிய கவர்களாக பல இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவற்றை எடுத்து புகார் தெரிவித்தனர். 

ஆதார் அட்டைதான் இப்போது அனைத்துக்கும் ஆதாரமாக பொதுமக்களுக்குத் திகழ்கிறது. இ ஆதார் என்ற வகையில் எண்களைப் பெற்று வேறு நகல் வாங்கிக் கொள்ளலாம், அல்லது இசேவை மையங்களில் ஆதார் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாலும், அரசின் சார்பில் வீட்டுக்கு அனுப்பப்படும் ஆதார் அட்டைகள் இவை. இவற்றைத்தான் பலர் கவனமாக வைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்தக் கார்டுகளே இப்படி அலட்சியமாகப் போடப் பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆதார் அட்டைகள் மட்டுமின்றி கடந்த 2015ஆம் ஆண்டில் மக்களுக்குச் சென்று சேர வேண்டிய வங்கி ரகசிய எண்கள், கல்லூரி அழைப்புக் கடிதங்கள், நகை ஏல ரசீதுகள், ஏடிஎம் ரகசிய பாஸ்வர்ட் எண்கள் என பல முக்கிய தபால்களை, பொதுமக்களிடம் கொண்டு சேர்க்காமல் குப்பைத் தொட்டியில் அலட்சியமாக வீசியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.