A youth who fell from the running train Two hours of blood struggle
திருச்சி
வையம்பட்டி அருகே ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞரை உடனடியாக மீட்க முடியாததால் அவர் சுமார் 2 மணி நேரம் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மக்கள் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள செவல்பட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவேக் கண்ணன் (27). இவர் நேற்று காலை சென்னையில் இருந்து குருவாயூர் விரைவு இரயில் மூலம் விருதுநகர் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்.
முன்பதிவில்லா பெட்டியில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த விவேக் கண்ணன் இரயில் வையம்பட்டி இரயில் நிலையத்தை கடந்து செவலூர் என்ற ஊரின் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென இரயிலில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் அவரின் முகம் மற்றும் கை,கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இரயில்வே தண்டவாளம் அருகே கிடந்தார். சிறிது நேரம் கழித்து அவர் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை அறிந்தனர்.
உடனே இது தொடர்பாக திருச்சி இரயில்வே காவலாளர்களுக்கும், மீட்புக் குழுவினருக்கும் தகவல் கொடுத்தனர். மேலும் விவேக் கண்ணன் விழுந்த இடத்திற்கு எந்தவித வாகனமும் செல்ல முடியாது என்பதால் கிராம மக்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூக்கி வந்து ஓர் இடத்தில் படுக்க வைத்தனர்.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஜி.என்.ஆர்.மீட்புக்குழு நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் தலைமையிலான மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த அவரை கரடுமுரடான பாதையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஸ்டெச்சரில் வைத்து தூக்கி வந்து அவரசர ஊர்தியில் ஏற்றி மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞரை உடனடியாக மீட்க முடியாததால் அவர் சுமார் 2 மணி நேரம் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர்தான் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக திருச்சி இரயில்வே காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
