'கொஞ்சம் முதலீடு அதிக லாபம்'; ஆசிரியரிடம் ஆசை காட்டி ரூ.52 லட்சம் மோசடி; மக்களே உஷார்!
கொஞ்சம் முதலீடு செய்தால் அதிக லாபம் அடையலாம் என ஆசிரியரிடம் ஆசை காட்டி ரூ.52 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இன்றைய உலகில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நவீன தொழிட்நுட்பம் மருத்தும், கல்வி, வேலை ஆகியவற்றுக்கு முக்கிய பங்களித்து வருகிறது. ஆனால் இந்த தொழிட்நுட்பங்களை தவறாக பயன்படுத்தி மோசடி செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு சம்பவத்தை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
கொஞ்சம் முதலீடு அதிக லாபம்
மதுரையை சேர்ந்த 35 வயதான ஆசிரியர் ஒருவர் பேஸ்புக் பயன்படுத்தி வந்தார். பேஸ்புக்கில் ஆன்லைன் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஒரு விளம்பரம் வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அவர் இது தொடர்பான லிங்கை கிளிக் செய்து அதில் வந்த வங்கி கணக்குக்கு ரூ.52,66,417 வரை கொஞ்சம் கொஞ்சமாக பணம் அனுப்பியுள்ளார்.
ஆனால் முதலீடு செய்த பணம் திரும்ப வராததால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்தார். இது தொடர்பாக மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு, ஆசிரியரை ஏமாற்றியவர்கள் குறித்தும், அவர் பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளில நடைபெற்ற முறைகேடான பண பரிவர்த்தனைகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
கேரள இளைஞர் சிக்கினார்
அப்போது கேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டம் காயம்குளம் பகுதியை சேர்ந்த அன்வர்ஷா என்பவர் 'செர்வ்' என்ற ஸ்கிராப் நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கைத் திறந்து பணம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்வர்ஷாவை அதிரடியாக கைது செய்த போலிசார், அவரிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு பாஸ்புக், பாஸ்போர்ட், ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அன்வர்ஷா ஆசிரியரிடம் மட்டுமின்றி பல வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி ஏராளமான பொதுமக்களை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்
காவல்துறை அட்வைஸ்
* பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் அதிகப்படியான லாபம் தருவதாக யாராவது உறுதியளித்தால் அதில் மோசடிக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
முன்பின் தொியாத நபர்களுடன் தொலைப்பேசியில் தனிப்பட்ட அல்லது நிதி சம்மந்தப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் எனவும் இம்மாதிரியான மோசடிகளை கண்டால் உடனே சைபர்கிரைம் பிரிவையோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளும்படியும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்க வேண்டும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.