a youngster arrested for slipper threw on the ranganathar temple
108 வைணவ தலங்களின் முதன்மையான ஆலயம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் கோயில் கருவறையில் இளைஞர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கோயிலுக்கு வரும் பக்தர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

நேற்று மாலை கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது, கோயில் கருவறை அருகே தரிசனத்துக்காக நின்றிருந்த வாலிபர் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த பையை கருவறைக்கு உள்ளே பெரிய பெருமாளை நோக்கி வீசினார்.
இளைஞரின் இந்த செயலைப் பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த கோயில் அறநிலையத்துறை நிர்வாகிகள், அர்ச்சகர்கள், பொதுமக்களும் இணைந்து அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர் வீசிய பையை போலீசார் சோதனை செய்தனர்.
அதில், உடைகள், சிறிய கத்தி, கத்திரிக்கோல் மற்றும் செருப்பு ஆகியவை இருந்துள்ளன. அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து நடத்தயி விசாரணையில், அவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சன்னாபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் (29) என்பதும் கொத்தனார் வேலை பார்ப்பதாகவும், காதல் தோல்வி மற்றும் திருமணம் கைகூடாததால் ஏற்பட்ட விரக்தியில் இதுபோன்று செய்ததாக போலீசாரிடம் அந்த நபர் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார், தர்மராஜை கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். செருப்பு, கத்தியுடன் கோயில் கருவறையில் பை வீசப்பட்டதை அடுத்து, பரிகார பூஜை நடத்தப்பட்டது.
