கல்யாணம் செய்துகொள்ள விடாத கள்ளக்காதலியை எரித்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கொடுங்கையூர், இந்திரா நகர் கைலாசம் தெருவை சேர்ந்தவர் உஷா. இவருக்கும், ஜிஞ்ஜித் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு  இரண்டு குழந்தைகள். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் கணவரை பிரிந்த உஷா அம்பத்தூரில் உள்ள தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த வாலிபர் கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது.

பின்னர், இருவரும் கணவன் மனைவி போல் தனி வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர். மேலும், அந்த இளைஞருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இதனால் இருவரும் சரியாக பேசிக் கொள்வதே இல்லை.

இந்நிலையில், கடந்த 10.7.2013ம் ஆண்டு, இரவு வீட்டுக்கு வந்த கார்த்திக், ‘‘நான் என் அம்மா, அப்பா சொல்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன்.நீ எனக்கு வேண்டாம்’’ என்று சண்டை போட்டுள்ளார். இதில், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி உஷாவை கொளுத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த உஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக், உஷாவை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.