ஈரோட்டில் விசாரணைக்காகப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை, எஸ்.ஐ ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கி, அவமானப்படுத்தியதால் மன உளைச்சலில் அந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், பி.பி.அக்ரஹாரம் ஹனிபா தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (18). 

இவர் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி ஈரோடு கனிராவுத்தர் குளம் அருகே பைக்கில் வந்திருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த கருங்கல்பாளையம் எஸ்.ஐ சத்தியசீலன் அருண்குமார் ஓட்டிவந்த பைக்கை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். போலீஸாரைப் பார்த்து பதறிப்போன அருண்குமார், வண்டியை நிறுத்தாமல் தப்பித்துச் சென்றிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த எஸ்.ஐ, அருண்குமாரின் பைக் நம்பரை வைத்து, வீட்டினுடைய முகவரியைக் கண்டுபிடுத்திருக்கிறார். இரவு 8 மணியளவில் போலீஸ் ஒருவரை அனுப்பி அருண்குமாரை ஸ்டேஷனுக்கு அழைத்து வரச் சொல்லியிருக்கிறார்.

அருண்குமார், பெற்றோருடன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது எஸ்.ஐ. சத்தியசீலன் அவரை கடுமையாக தாக்கியிருக்கிறார். வண்டியை நிறுத்த சொன்னா... தெனாவெட்டா போற... என்று அடித்திருக்கிறார். அப்போது அருண்குமாரின் பெற்றோர், இனி எங்க பையன் அப்படி செய்யமாட்டான்... அவனை மன்னிச்சிடுங்க கெஞ்சி கேட்டுள்ளனர். இதன் பின்னரே அருண்குமாரை விட்டிருக்கிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த அருண்குமார், அவமானம் தாங்காமல் இரவு முழுவதும் அழுதபடியே இருந்துள்ளார். இந்த நிலையில், மனமுடைந்த அருண்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

எஸ்.ஐ. சத்தியசீலன் தாக்கி, அவமானப்படுத்தியதால்தான் அருண்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது எஸ்.ஐ. சத்தியசீலனை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

என்னோட அம்மா-அப்பாவை போலீஸ் ஸ்டேஷன் படி ஏற வெச்சி கஷ்டப்படுத்திட்டேன் என்று அவரது நண்பரிடம் அருண்குமார் கூறியதாக தெரிகிறது. 

அப்பா அம்மா முன்னாடியே என்ன அடிச்சி அவமானப்படுத்திட்டாங்க... என்னால தாங்க முடியல என்று தனது நண்பரிடம் அருண்குமார் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி அருகே, பைக்கில் சென்ற தம்பதியை போலீஸ் எட்டி உதைத்ததில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் பைக்கில் சென்ற இளைஞனை கண்டுபிடித்து அடித்து உதைத்ததில் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.