A Warning to Tourists Going to the mundanthurai forest
திருநெல்வேலி
பாபநாசம் - முண்டன்துறை வனப் பகுதியில் யானைகள் கூட்டமாக திரிவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சேர்வலாறு மின் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது முண்டன்துறை வனப் பகுதி. இந்த வனப்பகுதிதான் புலிகள் காப்பகமாக செயல்பட்டு வருகிறது.
இந்த வனப் பகுதியில் சொரிமுத்து ஐயனார் கோயில், பாபநாசம் அணைக்கட்டு, சேர்வலாறு நீர் மின் உற்பத்தி நிலையம் போன்றவை அமைந்துள்ளன.
மேலும், இங்கு சிறுத்தை, மான், மிளா, யானை, கரடி குரங்கு, கருமந்தி போன்ற விலங்குகள் பரவலாகக் காணப்படுகின்றன.
கடந்த ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை தேசிய புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றதால் வனப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், மனித நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்துக் குறைந்ததால் வனவிலங்குகள் சாலைகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தன.
இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முதல் வனப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், முண்டன்துறையிலிருந்து சேர்வலாறு செல்லும் சாலையில் குட்டிகளுடன் கூடிய யானைக் கூட்டம் ஒன்று சாலையில் திரிந்தது.
இந்த யானை கூட்டத்தைக் கண்ட அந்த வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் சேர்வலாறு நீர் மின் திட்டத்திற்குச் சென்ற ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். யானைக் கூட்டங்கள் அந்த இடத்தைக் கடக்கும்வரை காத்திருந்து அதன்பின்னரே அனைவரும் அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியது: "யானைகளுக்கு இது இனப் பெருக்க காலமாகும். எனவே, அவை ஈன்ற குட்டிகள் ஓரளவு வளரும் வரையில் சமதளமான பகுதியில் இரை தேடி அலையும். இது இயல்பாக நடக்கக்கூடியதுதான். இருப்பினும், வனப் பகுதியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
