வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் நிறைமாத கர்ப்பிணி தாக்கப்பட்டதில் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருப்பதாக தெரிகிறது.

வாங்கிய பணத்துக்கு ஈஸ்வரி முறையாக வட்டி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஈஸ்வரியிடமும், அவரது கணவரிடமும்,  கடன் கொடுத்தவர்கள் வட்டி வசூலிக்க வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக தெரிகிறது.

நிறைமாத கர்ப்பிணியான ஈஸ்வரி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஈஸ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் இருந்த 9 மாத குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  

கடன் கொடுத்தவர்கள் தாக்கியதாலேயே என் மனைவியின் வயிற்றில் இருந்தகுழந்தை உயிரிழந்ததாக அவரது கணவர் குற்றம் சாட்டியுள்ளார். 

கடந்த ஆண்டு, நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இசக்கிமுத்து என்பவர், கந்துவட்டி கொடுமை காரணமாக குடும்பத்துடன் தீக்குளித்த உயிரிழந்தனர். இந்த நிலையில், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தாததை அடுத்து, வயிற்றில் இருந்த குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.