Asianet News TamilAsianet News Tamil

இராணுவ வீரர் மனைவியின் கைப்பையை திருடிய போலீஸ் ஏட்டு; உத்தமன்போல நாடகம் நடத்தி மாட்டிக் கொண்டார்...

A police man theft woman handbag at the railway station 25 thousand money robbed
A police man theft woman handbag at the railway station 25 thousand money robbed
Author
First Published Apr 19, 2018, 8:49 AM IST


திண்டுக்கல்

திண்டுக்கல், கொடைரோடு இரயில் நிலையத்தில் இராணுவ வீரர் மனைவியின் கைப்பையை திருடிய காவலர் ஏட்டும், அவருக்கு உடந்தையாக இருந்த பழ வியாபாரியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுதந்திராபுரத்தை சேர்ந்தவர் சிங்கர் உடையான் (33). இவர் காஷ்மீரில் இஇராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சண்முகபிரியா (27). இவர்களுக்கு ஒரு கைக் குழந்தை உள்ளது. 

நேற்று முன்தினம் சண்முகபிரியா டெல்லி செல்வதற்காக தனது கணவர், குழந்தையுடன் கொடைரோடு இரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்தார்.

அப்போது, தனது கணவர் சிங்கர் உடையான், தனது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு முதலாவது நடைமேடையில் உள்ள இருக்கையில் உட்கார்ந்திருந்தார். தனது கைப்பையை கணவரின் அருகில் உள்ள இருக்கையில் வைத்துவிட்டு சண்முகபிரியா டிக்கெட் முன்பதிவு செய்ய வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் குழந்தை அழுது கொண்டே இருந்தது. உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு சிங்கர் உடையான் அங்கும், இங்குமாக நடைமேடையில் நடந்து கொண்டிருந்தார். 

சிறிது நேரத்தில் முன்பதிவு செய்துவிட்டு சண்முகபிரியா வந்து பார்த்தபோது கைப்பையை காணவில்லை. இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்ததால் இருவரும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். அப்போது ஒருவர் கைப்பையை எடுத்து சென்றதாக தெரிவித்தனர். 

இது குறித்து சண்முகபிரியா கொடைரோடு இரயில் நிலைய அதிகாரியிடம் புகார் கொடுத்தார். அவர், இதுபற்றி இரயில்வே காவலாளர்களிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது இரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு துரைச்சாமி (51) அங்கு வந்தார். அவர் வாகன நிறுத்தம் பகுதியில் கைப்பை ஒன்று கிடப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவலாளர்கள், கைப்பையை எடுத்து சோதனை செய்தனர்.

ஆனால், கைப்பையில் இருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை காணவில்லை. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து இரயில்வே காவலாளர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் மதுரை இரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் மன்னர்மன்னன்  கொடைரோடு இரயில் நிலையத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

வாகன நிறுத்தம் பகுதியில் கைப்பை கிடப்பதாக கூறிய காவல் ஏட்டு மீது அதிகாரிக்கு சந்தேகம் ஏற்படவே அவரை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரித்ததில் கைப்பையை திருடியதாக ஏட்டு துரைச்சாமி ஒப்புக்கொண்டார். 

மேலும், அவர் பணத்தையும், ஏ.டி.எம். கார்டையும் பழ வியாபாரியான கொடைரோடு அருகில் உள்ள ஜெகதாபுரத்தை சேர்ந்த சதீஷ் (33) என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவலாளர்கள், ஏட்டு துரைச்சாமியையும், அவருக்கு உடந்தையாக இருந்த பழ வியாபாரி சதீசையும் கைது செய்தனர். அவரிடம் இருந்த பணமும், ஏ.டி.எம்.கார்டும் பறிமுதல் செய்யப்பட்டது. 

பின்னர் அவர்கள் இருவரையும் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்

பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே கைப்பையை திருடிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios